செபமாலைப் புதுமைகள்

செபமாலை புதுமைகள்
அருள் பணி. விக்டர் தேவராஜ்
தூய இருதயக் குருத்துவக் கல்லூரி 

கன்னி மரியாவின் செபமாலைஎன்னும் சுற்று மடலில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் செபமாலை என்னும் பக்தி முயற்சி பற்றி மிக அழகாக, தெளிவாக எடுத்துரைக்கின்றார். செபமாலை மரியாளைச் சார்ந்த பக்தி முயற்சியாக இருப்பினும், உள்ளார்ந்த வகையில் இது கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ளது. செபமாலையை கையில் ஏந்தி, மரியின் மடியில் அமரும் மக்கள் கிறிஸ்துவின் முகத்தை தியானிக்கவும் அவருடைய அன்பின் ஆழத்தை அனுபவிக்கவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்

செபமாலையின் வழியாக நம்பிக்கையாளர்கள் கன்னிமரியாவின் கரங்களிலிருந்து பெறுவதைப் போல் ஏராளமான அருளைப் பெறுகிறார்கள். அன்னையிடமிருந்து நாம் பெறுகின்ற அருள் நம்மை கிறிஸ்துவிடம் நெருங்கச் செய்கிறது. கடினச் சூழலில் அமைதியையும் ஆற்றலையும் பெற்றிடவும், பொறுமையில் வளரவும், பிறரை மன்னிக்கவும், அழைப்பினை ஆய்ந்து அறியவும் நமக்கு உதவுகிறது. நமது வாழ்வை மாற்றிட உதவுகிறது. ஒரு தனிநபருக்கு கிடைக்கும் அருள் பிறருடைய வாழ்வை மாற்றிடவும் உதவுகிறது

செபமாலை செபித்ததனால் ஏராளமானோருடைய வாழ்வைக் காப்பாற்றியுள்ளதை நீங்கள் அறிவீர்களா? இவ்வுலகில் வாழ்வோரை மட்டுமல்ல, உத்தரிப்பு ஆன்மாக்களையும் அது காப்பாற்றியுள்ளது. ஒரு நாட்டில் எழும் வன்முறைகளை ஒழித்து, அந்நாட்டிற்கு சுதந்திரத்தை அளித்துள்ளது. ஏராளமான புதுமைகளின் வழியாக செபமாலையின் வலிமை எடுத்தியம்பப்பட்டுள்ளது. கணக்கிடமுடியாத அளவுக்கு செபமாலையின் வழியாக புதுமைகள் நடந்த போதிலும், சான்றுகள் நிறைந்த சிலப் புதுமைகளைக் காண்போம்.

1. அல்பிஜென்சியக் கொள்கை முறியடிப்பு

கிபி 1100 -1200 களில் பிரான்ஸ் நாட்டைச் அல்பிஜென்சியக் கொள்கை ஆட்டிப்படைத்தது. 'மனித உடல் பாவம். எனவே அதை அழித்திடவேண்டும்' என இக்கொள்கை தவறைப் பரப்பியது. ஏராளமான கத்தோலிக்கர்கள் தங்களையே கொன்றார்கள். கிபி 1214 ல் அன்னை மரியாள் புனித தொமினிக்கு என்பவருக்கு காட்சி கொடுத்து, புனித செபமாலையை அவரது கையில் கொடுத்து, தவறான அல்பிஜென்சியக் கொள்கையை முறியடிக்கச் சொன்னார். அவரும் செபமாலை பக்தியை மக்கள் மத்தியில் வளர்த்தெடுத்து, அல்பிஜென்சியக் கொள்கையை முறியடித்தார். ‘அன்னை மரியாளிடமிருந்து ஏராளமான அருளைப் புனித தொமினிக்கு பெற்றது மட்டுமல்லாமல், தொமினிக்கன் சபையையும் நிறுவச் செய்தார் என்று புனித லூயி தெமோன்போர்ட், தனது 'செபமாலையின் இரகசியம்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்


2. பாத்திமாவில் நடந்த 'சூரிய புதுமை'

1917 ம் ஆண்டு ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ, லூசியா ஆகிய மூன்று சிறுவர்களுக்கு போர்த்துக்கல் நாட்டிலுள்ள பாத்திமா எனும் சிற்றூரில் கோவாடா ஈரியா எனும் இடத்தில் மே 13 முதல் அக்டோபர் 13 ம் நாள் வரை 6 முறை அன்னை மரியாள் காட்சிக் கொடுத்தாள். உலகில் அமைதி நிலவவும் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வரவும் தினமும் செபமாலை செபிக்குமாறு மூன்று சிறுவர்களைக் கேடடுக்கொண்டார். ஒளிரும் செபமாலையைத்தன் கையில் ஏந்தியவளாய், தான் செபமாலை அன்னை என்று தன்னையே அறிவித்தாள். 1917 அக்டோபர் 13 ம் நாள் மூன்று சிறுவர்கள் கண்ட காட்சிகள் உண்மை என்பதை நிரூபிக்க 70,000 மக்கள் கூடியிருந்த வேளையில் மிகப் பெரிய புதுமை ஒன்றை நிகழ்த்தினார். சூரியன் மேகத்தைக் கிழித்துக் கொண்டு ஒளிமயமான உருண்டைப் பந்தாக தோன்றிஅ ங்கும் இங்கும், மேலும் கீழும் ஆடத் தொடங்கியது. சூரியஒளி பல வண்ணங்களில் ஒளிவீசியது. சதுப்பு நிலங்களும் நனைந்து ஆடைகளும் உலர்ந்து விட்டன. சிலர் குணமடைந்தனர். அநேகர் மனமாற்றம் பெற்றனர். சிறிது நேரத்திற்குப்பின் சூரியன் தன் இடத்திற்குச் சென்றுவிட்டது.   

3. பிரேசில் நாட்டிற்கு விடுதலை

1960களில் ஜொவாவோ குலார்ட் பிரேசில் நாட்டின் தலைவராக இருந்தார். அண்டைத்தீவான கியூபா  கம்யூனிச நாடாக மாறியதைப்போன்று தன் நாட்டையும் கம்யூனிச நாடாக்க முயற்சி மேற்கொண்டார். அநேக மக்கள் கடவுள் மறுப்புக்கு கம்யூனிசக் கொள்கையை விரும்பவில்லை. பாத்திமா அன்னையின் அறிவுரையின்படி செபமாலை செபித்து, தவம் செய்து இத்தீமையை வெல்லலாம் என கர்தினால் பரோஸ்காமரா மக்களிடையே செய்தியை பரப்பினார். அதன்படி 59 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை, ஓய்வுபெற்ற படை மருத்துவரின் மனைவி டோனா அமெலியா பாஸ்தோஸ் என்பவர், தனது தோழிகள் 30 பேரை சேர்த்து நாட்டின் விடுதலைக்கான பெண்களின் இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி செபமாலை செபிக்க ஆரம்பித்தனர். பல குழுக்கள் நாடு முழுவதும் தோன்றி செபமாலைப் பவனிகளை நடத்தினர். 6,00,000 பெண்களைக் கொண்ட 'விடுதலையை நோக்கிய கடவுளின் குடும்பம்' என்ற பேரணி சாவோ புவுலோ எனும் இடத்தில் செபபுத்தகங்களையும் செபமாலையையும் கையிலேந்தி, கம்யூனிச கடவுள் மறுப்புக் கொள்கையை பிரேசில் நாட்டிலிருந்து வெளியேற்றியது. நாட்டின் தலைவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியது. இவ்வெற்றியை நினைவு கூறும் வகையில், கடவுளுக்கு நன்றி கூறும் வண்ணம் 50,00,000 பெண்கள் பங்கேற்ற 'கடவுளுக்கு நன்றி கூறும்' பேரணி ஒன்று நடந்தேறியது. மக்கள் அனைவரும் பாத்திமா அன்னை செபமாலையின் வழியாகத் தங்கள் நாட்டைக் காப்பாற்றினார் எனப் புகழ்ந்து பாடினர்

4. அரசரின் மீட்பு

லியோன், கலிசியா நாடுகளின் அரசராக இருந்தவர் அல்போன்சஸ் என்பவர். மக்கள் செபமாலை செபிக்கத் தூண்டும் வண்ணம் தனது ஆடையில் ஒரு பெரிய சொமாலையைத் தொங்கவிட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு நாளும் செபித்ததில்லை. அவர் மிகவும் நோயுற்று சாகும் தருவாயில் இருக்கும் பொழுது ஒரு காட்சி கண்டாராம். அக்காட்சியை புனித லூயிமோன் போர்ட், 'செபமாலையின் இரகசியம்;' என்ற தனது புத்தகத்தில் விவரிக்கின்றார். அரசன் இறந்து விடுகிறார். அவர் நரகத்திற்கு செல்ல வேண்டும் எனத்தீர்ப்பிடப்படுகிறார். அன்னை மரியாள் அரசனுக்காக மன்றாடுகிறார். தராசு ஒன்றை கொண்டுவரச் சொல்கின்றாள் அன்னை மரியாள். ஒரு தட்டில் அரசனுடைய பாவங்களை வைக்கின்றார். மறுதட்டில் அரசன் வைத்திருந்த செபமாலையையும், அதனைப்பார்த்து செபமாலை செபித்த ஆயிரக்கணக்கான மக்களின் செபமாலைகளையும் வைக்கின்றார். செபமாலைகள் இருந்த தட்டு அரசனுடைய பாவத்தட்டை வெற்றி கொண்டது. 'எனது செபமாலையை நீ அணிந்து, மக்களை செபமாலை செபிக்க தூண்டிய நற்செயலுக்காக என் மகனிடம் பரிந்து பேசி உனக்கு மீட்பைப் பெற்றுத்தந்துள்ளேன்', என அன்னை மரியாள் அரசனிடம் கூறினாளாம். அரசன் தன் நினைவுப்பெற்ற பின் மரியாளைப் புகழ்ந்து, தனது எஞ்சிய வாழ்நாளில் சொமாலை செபித்து, அப்பக்த்தி முயற்ச்சியை தம் மக்கள் மத்தியில் வளர்த்தாராம்.

5. கிரோஷிமா- அணுகுண்டு கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப்படல்

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் பொழுது அமெரிக்கா, ஜப்பான் நாட்டிலுள்ள கிரோஷிமா எனும் நகரில் அணுகுண்டு ஒன்றை வீசியது. அங்கிருந்த பங்குக் கோயில் தரைமட்டமானது. சுற்றுவட்டாரம் முழுவதும் பாலைவனமானது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டனர். எட்டு சேசுசபை மறைபரப்பு குருக்களும், அவர்களுடைய இல்லமும் பாதுகாக்கப்பட்டது. பலமுறை அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஆளானபோதும் எந்தவித இணுக்கதிர் வீச்சும் அவர்களை பாதிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. காக்கப்பட்ட எண்மரும் தாங்கள் காப்பாற்ப்பட்டது செபமாலையால்தான் என்று சான்று பகர்ந்தார்கள். தங்கள் இல்லத்தில் ஒவ்வொரு நாளும் எண்மரும் ஒன்று சேர்ந்து செபமாலை செபிப்பார்களாம். அவ்எண்மருள் முன்னாள் இயேசு சபைத்தலைவர் தந்தை அருப்பேயும் ஒருவர்.

6. செபமாலையின் குரு நலமடைதல்

1938ல் பேட்ரிக் பெய்ட்டன் என்பவர் அயர்லாந்திலிருந்து தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு நாடு பெயர்ந்தார். தன் இளம் வயதில் எலும்புறுக்கிநோயினால் பாதிக்கப்பட்டார். அக்காலத்தில் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. மருத்துவம் அந்த அளவுக்கு முன்னேறியதில்லை. பேட்ரிக் பெய்ட்டனுடைய உடன் பிறந்தவர் செபமாலை செபித்து அன்னை மரியாளிடம் செபிக்குமாறு அவரிடம் கூற, அவரும் தினமும் செபமாலை செபித்து, தன் நோய்  நீங்க அன்னை மரியாளிடம் வேண்டினார். மருத்துவர்கள் ஆச்சரியப்படும் வகையில் கூடிய விரைவில் நலம் பெற்றார். தன்னையே அன்னைக்கு அர்ப்பணமாக்கினார். செபமாலை  பக்தியை வளர்க்கப் போவதாக அன்னைக்கு வாக்களித்தார். குருவாக திருநிலைப்படுத்தப்பட்டப்பின் உலகெங்கும் சென்று செபமாலைப் பக்தியை வளர்த்தார். 'கூடி செபிக்கும் குடும்பம் குலையாமல் வாழும்' எனும் சொல்லாடலை உருவாக்கியவரும் இவரே. 1992ல் செபமாலையை கையிலேந்தியவராய் இறைபதம் இணைந்தார். இறையடியாரான இவருக்கு புனிதர் பட்டம் அளிக்க ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.


மேலே சொன்ன ஆறு புதுமைகளும் ஆதாரத்தன்மை கொண்டவை. நாமும் நாளும் செபமாலை செபித்து அன்னையின் அரவணைப்பில் வாழுவோம் பிறரையும் செபமாலை செபிக்க ஊக்குவிப்போம்.

இத்துன்பம் மிகுந்த காலத்தில் அன்னை மரியாவிடம் நம்பிக்கையோடு குடும்பமாக மன்றாடுவோம். அன்னை மரியாள் நமக்காக இயேசுவிடம் மன்றாடுவார்.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD