கொரோனா கவிதைகள் - 1

கொரோனா கவிதைகள் - 1

விக்டர் லாரன்ஸ் - குடந்தை 

விடையறிய அவா

வைரஸை கொடுத்து
வாரிசை எடுத்து
விண்ணிற்கு விருந்தாக்கிய
இயற்கையின் விடுகதைக்கு
யாரிடம் விடைபெறுவேன்?
மௌனத்தை மட்டுமே
மதங்களும் மதில்களாக
மண்ணகத்தில் முன்வைத்தன.
அறிவியல் வளர்ச்சியும்
அனுமானத்தையே
அறைகூவலாக்கின.
தொலைதொடர்பும்
தொந்தரவாகின,
தன்னம்பிக்கையின்றி.
விடையறிந்த உள்ளங்களே
வீறுகொள்ளுங்கள் விருப்பத்தோடு,
உண்மைக்கு உருகொடுக்க.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 
வீரியம் அதிகமோ?
நல்லவை யாவும்
நெஞ்சை நிமிர்த்தி
நகர்வலம் வந்து
நடுவுலகில் நங்கூரத்தை
நிதானமாய் நட்டாலும்,
தீயவை மட்டும்
திடீரென உருவாகி
தரணியரை தொற்றி
தனிமைக்கு தள்ளுகிறது,
கொரோனா என்ற
கொடூரனைப் போல
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + +   

எப்போதும் வேண்டும் !
சமத்துவம் சமாதியாகவில்லை
உதவி ஓடிவிடவில்லை
சகிப்புத்தன்மை சஞ்சலமாகவில்லை
பொறுமை பறந்திடவில்லை
பரிவு பாழாகவில்லை
சட்டம் சாய்ந்திடவில்லை
அதிகாரம் ஆட்டிப்படைக்கவில்லை
ஒழுங்கு ஓய்ந்திடவில்லை
மனம் மறைந்திடவில்லை
இருந்தாலும்
இதயத்தில் இடறல்,
ஆபத்து அணுகும்போது மட்டுமே,
அனுமதிக்கப்படுகின்றன
அனைத்தும்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 

எதற்கும் தனித்தன்மை!

அந்தந்த மண்ணை
அவணியர் யாவரும்
அன்பு செய்திருந்தால்,
அன்றாடம் உயரும்
உயிர்பலிகள் யாவும்,
பாதியாய் குறையுமென்ற
பக்குவம் பெற்றிருப்போம்,
பதறிய நாட்களில்.
அந்தந்த மண்ணில்
அவரவர் வாழ
அனுமதி அளித்திருந்தால்,
ஏற்றத்தாழ்வென்பது
இகழ்ச்சியாக இருந்திருக்காது,
எதார்த்தமாக இருந்திருக்கும்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 
தீமை
தீயவை மட்டும்
துளியாக இருந்தாலும்,
தூரத்தில் இருக்கும்
துரும்பைக்கூட
துரத்திப்பிடிக்கிறது,
கொரோனாவைப் போல.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 

2 comments:

  1. அனைத்து படைப்புகளும் அருமை அண்ணா... மேலும் இது போன்ற நிறைய படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்..இறைவன் உங்களுக்கு அனைத்து உடல் உள்ள பலன் தந்து காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறோம்..

    ReplyDelete

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD