அன்னையை அறிவோம் - 6

குவாதலூப்பே அன்னை (டிசம்பர் 12)

திருத்தொண்டர் வில்சன் 
ஒவ்வொரு ஆண்டும் இலத்தீன் அமெரிக்காவின் அரசியும், கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலியுமான குவாதலூப்பே அன்னைiயின் பெருவிழா மெக்ஸிகோவில் கடன் திருநாளாக தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
குவாதலூப்பே அன்னையின் காட்சி
ஸ்பானியப் பேரரசில் (இலத்தீன் அமெரிக்கவை சுற்றிய பகுதி) மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவை டிசம்பர் 9ம் தேதியன்று கொண்டாடும் பழக்கம் இருந்தது. 1531ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, இரண்டு ஆண்டுகளுக்கு முனபு மனைவியை இழந்த ஏறக்குறைய 57 வயதுடைய யுவான் தியெகோ  என்ற ஏழை விவசாயி அதிகாலையில் தனது கிராமத்தில் ஆலயம் ஏதும் இல்லாததால், மெக்சிகோ நகரிலுள்ள ஆலயத்தில் திருப்பலியில் பங்கு கொள்வதற்காக தேபியாக் என்னும் குன்று வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். திடிரென அவர் காதுகளில் இனிமையான இசையை கேட்டார். இசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றிலும் பார்த்த போது தேபியாக் குன்றின் உச்சியில், ஞாயிறு போல் பிரகாசமான ஒளியைக் கண்டார். திங்களைப் போல் அழகு கொண்ட ஒரு பெண்ணின் குரல், தியெகோவை அக்குன்றில் ஏறி வருமாறு அழைத்தது. தியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, விண்ணக மகிமையில், பிரகாசமான ஒளிக்கு மத்தியில் தூய கன்னி மரியாள் தன் கரங்களை குவித்து நிற்பதைக் கண்டார்.
யுவான் தியெகோ உலகின் பூர்வீக இனமான அஸ்டெகிலிருந்து மனமாறி கிறிஸ்தவ மறையினைத் தழுவியவர். அன்னை மரியா தியெகோவின் தாய்மொழியான நாகவற் மொழியில் தனக்காக ஒரு திருத்தலம் கட்ட வேண்டும் என மெக்சிகோ நகரிலுள்ள ஆயரிடம் சென்று சொல்லச் சொன்னார். தியெகோவும் அன்னையின் வார்த்தைக்கிணங்க மெக்ஸிகோவின் ஆயரிடம் சென்று அதனைத்தையும் தெரிவித்தார், ஆனால் ஆயர் தியெகோவின் வார்த்தைகளை துளியும் நம்பவில்லை.
அடுத்த நாளும் தேபியாக் குன்றின் உச்சியில் தோன்றிய அன்னை மரியாள் மீண்டும் ஆயரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார். அதேபோல் தியெகோ ஆயரிடம் சென்று நடந்த அனைத்தையும் சொன்னார். தியாக்கோ மீது சந்தேகம் கொண்ட ஆயர், அடுத்த முறை அன்னை மரியாள் உனக்கு காட்சி தருகிற பொழுது அனைவரும் நம்புகின்ற வகையில் அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேள் என்று தியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே தியெகோ அன்னைமரியாவிடம் நடந்தததைச் சொன்னார். அன்னை மரியாவும் அடுத்த நாள் காலையில் ஆயர் நம்புகின்ற வகையில் ஓரு அடையாளம் தருகின்றேன் என்று உறுதியளித்தார்.
ஆனால் அன்று இரவே தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் தேபியாக் குன்றின் உச்சிக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஒரு குருவை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னைமரியா, தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலையில் தியெகோவுக்கு காட்சியளித்துநான் உன் அன்னை இல்லையா? நீ என் கரங்களில் தானே இருக்கின்றாய்? உன் மாமா நிச்சயம் நலமைடைவார், இறக்கமாட்டார். அவரைக் குறித்து கவலை கொள்ளாதே. உடனே நான் முன்பு மூன்று முறை காட்சியளித்த தேபியாக் குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு என்னிடம் வாஎன்று கூறினார். அந்தப் பாறைக் குன்றின் உச்சியில் இந்த டிசம்பர் மாத உறைபனி குளிரில் எந்தப் பூக்களும் பூக்க வாய்ப்பில்லை என்பது தியெகோவுக்குத் தெரிந்திருந்தும் அன்னையின் வார்த்தைக்கு கீழ்படிந்து அங்குச் சென்றார். அங்கு அழகிய ரோஜா பூந்தோட்டம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அதிலிருந்து ரோஜா மலர்களைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து ஒடி வந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்தப் ரோஜா மலர்களை தன் கரங்களில் பெற்ற அன்னை அவரது மேற்போர்வையில் அதை அழகுபடுத்திக்கொடுத்து, ஆயரிடம் அதை கொண்டுபோகச் சொன்னார். ஆயரை நம்பிக்கை கொள்ள தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.
தியெகோ  புதிதாக மெக்ஸிகோவின் ஆயராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஃப்ரே யுவான் தே சுமாராங்காவின் முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் தியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் அந்த மேற்போர்வையில், தியெகோ முன்பு ஆயரை சந்திக்க வந்த போது தனக்கு காட்சியளித்த அன்னை மரியாவின் தோற்றத்தை பற்றி எப்படி வருணித்திருந்தாரோ அதேமாதிரியான அழகிய அன்னை மரியாவின் உருவம் பதிந்திருந்தது. அதே நாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னைமரியா சொல்லியிருந்ததை தியெகோவிடம் பெர்னார்தினோ சொன்னார். கட்டவிருக்கின்ற ஆலயத்தில் தன்னைகுவாதலூப்பே அன்னைஎன்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார்.
அன்னையின் விருப்பத்தின் பேரில் அங்கு எழுப்பப்பட்ட ஆலயம் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக பல லட்ச மக்களுக்கு மனமாற்றத்தையும் இறைவனின் ஆசீரையும் நிறம்ப பெற்று தந்து கொண்டிருக்கிறது.
குவாதலூப்பே அன்னையின் ஓவியம்
இரவில் நீலநிற வானம் நட்சத்திங்களை ஆபரணங்களாய் கொண்டு அழகுற காட்சியளிப்பது போல அன்னை, பல மொழிகளைப் பேசும் 8 மில்லியன் மெக்ஸிக்கோ மக்களைக் குறிக்கும் சிவப்பு நிற ஆடையின் மீது நட்டத்திரங்கள் பொறிக்கப்பட்ட நீல நிற துணியை போற்றியவளாய், சூரியனைவிட ஒளிமிக்கவளாய் தன் பாதத்தில் பிறை நிலாவையும் அதன் கீழே அஸ்டெக் இனத்தின் கடவுளை விட தான் சக்திமிக்கவள் என்பதை குறிக்கும் அஸ்டெக் கடவுளைக் குறிக்கும் குறியீட்டையும், தான் கடவுளல்ல கடவுளிடம் பரிந்து பேசி அருளைப் பெற்றுத்தருபவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஜெபிக்கும் கரங்களையும் கொண்டு அந்த போர்வையில் தன் உருவை பதியச்செய்தார் குவாதலூப்பே அன்னை.
இத்திருவோவியம், தற்போது குவாதலூப்பே அன்னை பேராலயத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இது மெக்சிக்கோவின் மிகவும் புகழ்பெற்ற சமைய மற்றும் கலாச்சார சின்னமாகக் கருதப்படுகின்றது. இவ்வோவியத்தில் இருக்கும் அன்னைமரியாவுக்கு மெக்சிக்கோவின் அரசி என்னும் பெயரும் உண்டு.
குவாதலூப்பே அன்னையும் திருஅவையும்
12 அக்டோபர் 1945ல் திருத்தந்தை 12ம் பத்திநாதர், குவாதலூப்பே அன்னையைஅமெரிக்கர்களின் பாதுகாவலிஎன்று அதிகாரப்பூர்வமாக பிரகடணம் செய்தார்.
1999இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், குவாதலூப்பே அன்னையை இலத்தீன் அமெரிக்காவின் அரசி, மற்றும் கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலி என்று அழைத்தார்.
காட்சி தரும் செய்தி
தியாகோவுக்கு அன்னை காட்சிக்கொடுத்தபோது, “நானே இரக்கத்தின் அன்னை, என்னிடத்தில் வேண்டுவோருக்கெல்லாம் அருளாசிர் வழங்குவேன்என்று கூறினார். நம்பிக்கையோடு அன்னையிடம் எழுப்பப்டும் விண்ணப்பங்களெல்லாம் இறைவனிடத்தில் பரிந்து பேசி பலனை பெற்றுத்தருகிறார் என்பதை குவாதலூப்பே அன்னையின் திருக்காட்சி மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.

நம்பிக்கையோடு ஜெபிப்போம்... அருளாசீர் பெறுவோம்...

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD