Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

கொரோனாவே கொஞ்சம் கேட்டு கண் மூடு!

கொரோனாவே கொஞ்சம் கேளு…

விக்டர் லாரண்ஸ் - கும்பகோணம்

----------------------------------------
வகவகயா நோயிருந்தும்
வயிரார உண்டுவந்தேன்.
உடம்பெல்லாம் புண்ணிருந்தும்
வாரம் ஒன்னில் வலிமறந்தேன்.

பிரியாணி இல்லனாலும்
பழங்கஞ்சி குடுச்சுவந்தேன்.
பீட்சாதான் இல்லனாலும்
பிஸ்கட்ட சாப்புட்டேன்.

சீனாவுல கூடுகட்டி
சிம்புளா வாழமறந்து,
டிக்கெட்கூட இல்லாம
டூருக்கு எப்டிப்போன?

விசா வர எனக்குந்தான்
வருசம் பல ஆகுதிங்க.
கால்கள்கூட இல்லாம
கடல்கள் பல தாண்டிட்டியே

டிசம்பரில் தொடங்கிவச்ச
திருவிழா கூட்டந்தான்
வெடிவச்ச தொடங்கிவக்க
விளக்கநீயும் கொடுக்கலயே.

தொண்டையில பொட்டுவெடி
வட்டமாவே வச்சுப்புட்ட.
நெருப்புக்கூட இல்லாம
நிக்காம வெடிக்குதிங்க.

தொழிற்சாலை ஒன்னமட்டும்
துண்டாக்கி போட்டிருந்தா
அழிச்சுப்புட்டு மறுவருசம்
அப்படியே கட்டிருப்பேன்.

ஆனாலும் உன்கோபம்
அதிகமாவே இருப்பதால
மனுசங்கள மட்டுந்தானே
மத்தளமா அடுச்சுப்புட்ட.

இந்தகோவம் எதனாலனு
ரெண்டுவரில சொல்லிடினா
பத்துநாளு முடிவுக்குள்ள
பரிகாரஞ் செஞ்சிடுவேன்.

வெவரம் தெரிஞ்ச மனுசனுக்கே
உன்னபத்தி புரியவில்ல
படிக்காத மனுச நாங்க
பக்குவமா எடுத்துச்சொல்லேன்.

இந்தசோகம் முடுச்சுக்கவே
இந்த வருசம் பத்தாதே
கொஞ்சம் நீயும் கோச்சுக்காம
கல்லறையில் கண்மூடு.

-லாரன்ஸ்

இயற்கை இன்னொரு தெய்வமாய் - விக்டர் லாரன்ஸ்

இயற்கை இன்னொரு தெய்வமாய்

விக்டர் லாரன்ஸ் 


---------------------------------------------------

கானல் நீரை
கட்டியணைக்க
கர்வத்தோடு 
களமிறங்கும்
கை சூப்பும் 
குழந்தை போல
கொரோனாவின் 
குடும்பத்தை
குறி சொல்லி
கதை முடிக்க

அறிவும் மருந்தும்
அன்றாடம் 
உழைத்தும்
அழிக்க முடியாத 
அவல நிலையில்

இனியாவது 
இயற்கையை
இன்னொரு 
தெய்வமாய்
இகத்தில் 
போற்றி
வாழ்வோம் 
நாமும்
வருத்தமில்லா
வாழ்வை

-
லாரன்ஸ் 

கொரோனா கவிதைகள் - 3

யார்பக்கம்

இயற்கையும் பணமும்
எதிர்நீச்சல் போட்ட
இடைத்தேர்தலில்,
வைரஸென்ற
விருந்தாளி
வேட்பாளரின் விதியை
வித்தியாசமாய் வர்ணிக்க,
ஓட்டுபோட
விருப்பம் கொண்டு
வரிசையில் நின்ற
உயிர்களெல்லாம்,
நின்ற இடம் தெரியாமல்
நிழலைக்கூட மறைக்கிறது,
நிம்மதி தொலைத்து.
-
விக்டர் லாரன்ஸ், கும்பகோணம்
-

குடிமகன்கள் ?

மதுகுடித்த மகான்கள் 
எல்லாம்
மர்ம தேசத்து
மகரிஷி போல,
உண்ட மயக்கம்
உடலை முறைக்க
சாலையின் ஓரத்தில்
சங்கீதம் பாடி
சர்க்கஸ் காட்டினார்கள்,
சிட்டுக்குருவிக்கு.
அவர்களை காணா
அவலத்தில் ஏங்குகிறது,
சாலையோர சிட்டுக்குருவி,
வைரஸின் வில்வித்தையால்.

-
விக்டர் லாரன்ஸ், கும்பகோணம்

கொரோனா கவிதைகள் - 2


கொரோனா கவிதைகள் - 2

விக்டர் லாரன்ஸ் - குடந்தை 

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +


நோயும் ஆயுதமாய்
ஆயுதம் வைத்து
அருகில் வராமல்
அணைபோட்ட
காலம் போய்,
நோய் வைத்து
நிம்மதி தொலைக்கும்
நூதன முறையை
நுழைத்துள்ளன
சில நீச உயிர்கள்.

                                   + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
நான்
நான்
அவணியில் வாழ
அடுத்தவர் அவசியமென்ற
அகராதியை
அறுதியிட்டு
அளந்துவிட்டது,
சீனாவிலிருந்து
சீறிப்பாய்ந்த
சிறிய வைரஸ்.
 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
மாட்டு சாணத்தின் மகிமையை மறந்தவர்க்கு
மாட்டு சாணத்தை
மனையின் முன்பு
மணக்கச் சொல்லி
மருந்து சொன்னார்
முன்னோர்.
வளர்ச்சியின் முனைப்பில்
வளமையை மறந்து
மூடினோம் மண்ணை.
இருந்தாலும் என்னவோ
துணிச்சலுள்ள கொரோனா
தொண்டையில் நுழைந்து
தூண்டுகிறது நம்மை
முடிந்தால் என்னை
முடக்கிப் பாரென
சாணத்தில்

 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
தனிமை
தனிமையின்
நோக்கத்தை ஏற்கா
நபர்களால் தான்
நானிலத்தின் நடுவில்
நங்கூரத்தை
நிறுத்திவிட்டு,
நானிலத்தவரை பார்த்து
நகையாடுகிறது வைரஸ்,
கொரோனா என்ற
கர்வத்தோடும்,
கௌரவத்தோடும்

 + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
உண்மை என்ன?
வைரஸ்
உலாவரும் வரலாறு
வையகத்தில் வைரலாக
விரைந்தாலும்,
பின்னணி மட்டும்
உடன்கட்டை ஏறிய
உத்தமியாய்
புதைந்த உடலுக்குள்
நகைத்துச் செல்கிறது,
நானிலத்தவரைப் பார்த்து,
உண்மை யாதென
உணர்த்தாமலேயே
           + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
ஏதாவது செய்
வைரஸ் பதிந்த
விரல்கள் பட்டதால்
வாழ்வை தொலைத்து
விண்ணை தொட்டவர்
வெகுவாக வளர்ந்திடினும்
வைரஸ் படாமலே
வைத்தியர் தொடாமலே
நான்கு சுவற்றுக்குள்
நகம் பதித்து
நாளைய வாழ்வை
நகர்த்தக்கூட
நாதியில்லாமல்
வாழ்வின் விலைதேடி
நீண்ட வரிசையில்
நகர்கிறவர்கள்தான்,
நானிலத்தில் நிறையபேர்.
முடிந்ததை செய்வோம்
முடியாதவர்க்கு
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

கொரோனா கவிதைகள் - 1

கொரோனா கவிதைகள் - 1

விக்டர் லாரன்ஸ் - குடந்தை 

விடையறிய அவா

வைரஸை கொடுத்து
வாரிசை எடுத்து
விண்ணிற்கு விருந்தாக்கிய
இயற்கையின் விடுகதைக்கு
யாரிடம் விடைபெறுவேன்?
மௌனத்தை மட்டுமே
மதங்களும் மதில்களாக
மண்ணகத்தில் முன்வைத்தன.
அறிவியல் வளர்ச்சியும்
அனுமானத்தையே
அறைகூவலாக்கின.
தொலைதொடர்பும்
தொந்தரவாகின,
தன்னம்பிக்கையின்றி.
விடையறிந்த உள்ளங்களே
வீறுகொள்ளுங்கள் விருப்பத்தோடு,
உண்மைக்கு உருகொடுக்க.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 
வீரியம் அதிகமோ?
நல்லவை யாவும்
நெஞ்சை நிமிர்த்தி
நகர்வலம் வந்து
நடுவுலகில் நங்கூரத்தை
நிதானமாய் நட்டாலும்,
தீயவை மட்டும்
திடீரென உருவாகி
தரணியரை தொற்றி
தனிமைக்கு தள்ளுகிறது,
கொரோனா என்ற
கொடூரனைப் போல
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + +   

எப்போதும் வேண்டும் !
சமத்துவம் சமாதியாகவில்லை
உதவி ஓடிவிடவில்லை
சகிப்புத்தன்மை சஞ்சலமாகவில்லை
பொறுமை பறந்திடவில்லை
பரிவு பாழாகவில்லை
சட்டம் சாய்ந்திடவில்லை
அதிகாரம் ஆட்டிப்படைக்கவில்லை
ஒழுங்கு ஓய்ந்திடவில்லை
மனம் மறைந்திடவில்லை
இருந்தாலும்
இதயத்தில் இடறல்,
ஆபத்து அணுகும்போது மட்டுமே,
அனுமதிக்கப்படுகின்றன
அனைத்தும்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 

எதற்கும் தனித்தன்மை!

அந்தந்த மண்ணை
அவணியர் யாவரும்
அன்பு செய்திருந்தால்,
அன்றாடம் உயரும்
உயிர்பலிகள் யாவும்,
பாதியாய் குறையுமென்ற
பக்குவம் பெற்றிருப்போம்,
பதறிய நாட்களில்.
அந்தந்த மண்ணில்
அவரவர் வாழ
அனுமதி அளித்திருந்தால்,
ஏற்றத்தாழ்வென்பது
இகழ்ச்சியாக இருந்திருக்காது,
எதார்த்தமாக இருந்திருக்கும்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 
தீமை
தீயவை மட்டும்
துளியாக இருந்தாலும்,
தூரத்தில் இருக்கும்
துரும்பைக்கூட
துரத்திப்பிடிக்கிறது,
கொரோனாவைப் போல.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + 

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD