இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 1

இயேசுவின்  உவமைகளும் உதாரணங்களும் - 1
பா. கா. அலெக்ஸ் சகாயரஜ்
= = =

தொன்று தொட்டு பழங்காலத்திலிருந்து எந்த ஒரு கருத்துப்பரிமாற்றத்திலும் குறிப்பாக பெரிய வகையில் மேடை உரையாயினும் சரி, சிறிய வகையில் சாதாரண அறிவுரையாயினும் சரி உவமைகளைக்கொண்டும், உருவகங்களைக்கொண்டும், உதாரணங்களைக்கொண்டும் விளக்குவது என்பது நமக்கெல்லாம் வெள்ளிடைமலை. 2000-ம் வருடத்திற்கு முன்பு வரலாற்றுப் பக்கங்களை பின்தள்ளிப் பார்த்தால் நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவும்கூட உவமைகள் வாயிலாகவே இறையாட்சியை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றிருக்கிறார் (மத்13:3). இன்றைக்கு சமூக ஊடகங்கள் எளிதாக செய்கின்ற பணியை அன்றைக்கு இயேசு கடினப்பட்டு சமூகங்களை ஊடுருவிச்சென்று பரப்பினார். ஏனெனில் செய்தியும் அவரே அதைக்கொண்டுச் செல்லும் ஊடகமும் அவரே
தந்தைக் கடவுள் பணித்ததை சிறப்பாக செய்ய, நற்செய்தியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லஎளிய மக்களுக்கு எளிய இறைவனை எளிய வகையில் பறைசாற்றிட அவருக்கு இப்படிப்பட்ட யுக்திகளை கையாள வேண்டிய தேவையிருந்தது. அதனால்தான் என்னவோ உரைகளிலே உதாரணங்களையும், உதாரணங்களுக்காக உவமைகளையும், உவமைகளிலே உதாரணங்களையும், உருவகங்களையும் பயன்படுத்துவது அவரது எளிய பாணியாகவே அமைந்துவிட்டது
உன்னதரின் உவமைகளும் உதாரணங்களும் என்கிற இக்கட்டுரைப்பயணம் நற்செய்திகளில் இயேசு மொழிந்த உவமைகளிலோ அல்லது உருவகங்களிலோ உள்ள பொருட்களின் உள்ளார்ந்த பொருளை அறியும் வகையில் இனிவருகின்ற இக்கட்டுரைகள் அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. நற்செய்திகளிலே முதன், முதலாக எழுதப்பட்ட நற்செய்தியான மாற்கு நற்செய்தியிலிருந்து தொடங்கப்பட்டு பின்னர் அதன்பின்வரும் நற்செய்திகளிலிருந்து நம்முடைய இக்கட்டுரைப் பயணத்தை தொடரவிருக்கிறோம். தந்தைக் கடவுளின் ஆசீரோடும், அண்ணல் இயேசு பெருமானின் வழிகாட்டுதலோடும், தூய ஆவியின் சிந்தனைத் தூண்டுதல்களோடும், அன்னையின் அளவில்லா அன்போடும், பரிந்தோரையோடும், எனது அன்பார்ந்த வாசகர்கள் உங்கள் அனைவரின் செபங்களோடும் இக்கட்டுரைப் பயணத்தை தொடர்வதிலே மற்றும் பயணிப்பதிலே மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருத்துக்ளை முழுமையாக ஏற்கிறோம். வாருங்கள் இறைவனோடும் இறை ஆவித்தூண்டுதல்களோடும் பயணிக்க….
- - - - - - - - -  


நற்செய்தி: மாற்கு
பகுதி : மாற்கு 2:21 (மத்; 9:16 , லூக் 9: 56)
சூழ்நிலை: நோன்பு பற்றிய கேள்வி
உதாரணம்பழைய ஆடையில் புதிய துணி


நற்செய்திகளிலே மிகச்சிறிய நற்செய்தி மாற்கு நற்செய்தி. இந்நற்செய்தி யாரை மையப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது என்ற பின்னணியை பார்க்கும்பொழுது உரோமை நகரில் வாழ்ந்த புதியதாக மனமாற்றமடைந்த பிறஇனத்து கிறிஸ்துவர்களை மையப்படுத்தியதாக அமைகிறது. அவர்களின் துன்ப துயரங்களிலே இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்கும் மற்றும் நலமளிக்கும் நற்செய்தியாக புனித மாற்கு இதனைக் கொடுக்கிறார். அவர்கள் மனந்தளராமல் இருந்திடவும், இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளின் மகன் என்று உரைத்திடவுமே இந்த நற்செய்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது இறையியலாளர்களின் கூற்றாக அமைகிறது
இவ்வகைப்பின்னணியில் இப்பகுதியை கவனிக்கும்போது இயேசு மாற்கு நற்செய்தயில் செயல்களின் வீரராக காண்பிக்கப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் மாற்கு நற்செய்தியின் இரண்டாம் அதிகாரத்திலேயே ஒரு ஒரு சிலர் இயேசுவிடம் நோன்பு பற்றிய விவாதத்தை மேற்கொள்கின்றனர். இவ்விவாதத்தை கையாளத்தான் இயேசு பெருமான்எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்: கிழிசலும் பெரிதாகும்என்று சொல்கிறார்
மாற்கு நற்செய்தியில் தொடக்கத்திலிருந்து இந்நிகழ்வுவரை இதுதான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட பொருளாக நமக்கு தென்படுகிறது. இயேசு இவ்வுதாரணத்தை பயனபடுத்துவதற்கு சரியான ஒரு நபராக நான் பார்க்;கிறேன். ஆடையில்லாமல் இறந்து இம்மனுக்குலத்தின் ஆடையாக மாறிய இயேசுவுக்கு தெரிந்திருந்தது ஆடை மனிதனின் உடலை மறைக்கும் தேவை மட்டுமில்லையென்று, அது மனிதனின் அங்கீகாரம், அதனினும் மேலாக அடையாளம். லேவியிர் நூலிலே 16:29 –ல் இஸ்ரயேல் மக்களிடையே நோன்பின் முக்கியத்துவத்தை காண்கிறோம். தொடக்கத்திலே நோன்பு (லேவி23;:27) ஒருநாளாக இருந்ததை பின்வரும் நாட்களில் இந்த யூதர்கள் இன்னும் வெவ்வேறு நிகழ்வுகளுக்கும் நோன்பிருக்க வேண்டும் என்று தங்களின் காலஅட்டவணையை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டனர். உதாரணத்திற்கு 586-ல் எருசலேம் ஆலயம் வீழ்த்தப்பட்டதற்கு மற்றும் மற்ற கலாபனைகளுக்கும் சேர்த்து நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். பரிசேயர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(லூக்18:12). இவ்வனைத்தையும் மேற்கோள் காட்டிதான் இயேசுவிடம் உங்கள் சீடர்கள் நோன்பிருக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவர்களின் சிந்தனைகளை உள்ளுணர்ந்தவர்களாய், இயேசுவும் சரி, இந்நற்செய்தியின் வழியாக அவரை வெளிப்படுத்துகின்ற மாற்குவும் சரி மணமகனின் வழியாக இயேசு கடவுளின் மகன் என்பதை ஊர்ஜிதம் செய்கிறார். இயேசு தன்னுடைய புதிய இறையாட்சியி;ல் மக்களை வஞ்சிக்கின்ற  யூதர்களின் பழைய சட்டத்திட்டங்கள் ஏற்றதான ஒன்று அல்ல என்பதை பழைய ஆடையில் புதிய துணியை ஓட்டுவதில்லை என்பதை ரத்தினச்சுருக்கமாக வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்

கட்டுரையாளார் தொடர்புக்கு



No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD