சனிக்கிழமை சங்கதி 4

சனிக்கிழமை சங்கதி 4

சகோ. மெரா 

----------------------------

வணக்கம் அன்பு வாசகர்களே!  இன்று சனிக்கிழமை வந்தாச்சு... அதுக்குள்ள சனிக்கிழமை வந்தாச்சா? என்று அதிர்ந்து போபவர்களும் உண்டு! 
அதேநேரத்தில் சண்டே ஆவது மண்டே ஆவது All day Jolly day என்று வாழ்க்கையில் வழுக்கையே விழுந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாதவர்களும் உண்டு. 
இன்றைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களும் சவால்களும் நமது வாழ்வை ஏறி! ஏறி! சறுக்கி! சறுக்கி! விளையாடும் சறுக்கு மரமாக மாற்றி இருக்கிறது. அதிலும் இந்த வாரம் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வாரமாகவும் இருக்கிறது. 
என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதுதாங்க அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கொலை சம்பவம், கேரளத்து யானையின் இறப்பு, கொரோனாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இந்த வாரம் முழுவதுமே இறப்பு வாரமாகவே இருக்கிறது. பலருக்கு இந்நிகழ்வுகள் பழகிப்போன ஒன்றாக இருக்கலாம், பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி அடுத்து நாம் தானோ? என்ற பயமும் ஏற்படலாம். 
மனிதம் எங்கே செல்கிறது என்று பலரும் புயல் காற்றில் ஊதும் புல்லாங்குழல் இசை போல இருப்பது இன்றியமையாதது. இதன் நடுவில் நாம என்ன சங்கதி பேச போறோம் என்று பலர் என்ன கூடும். காஞ்சி போய் கழட்டி மாட்டி விட்டு கொண்டிருக்கும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வரண்ட மனங்களில் கொஞ்சம் மழை பெய்தால் நல்லாதான் இருக்கும்.
சரி வாங்க சங்கதிக்குள் போகலாம்
கொஞ்ச வருடத்துக்கு முன்னாடி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் வெளியூருக்கு வேலை விடயமாக சென்றிருந்தார். சென்ற ஊரில் யாரையும் தெரியாத காரணத்தால் அங்கு இருந்த விடுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்தார். என்னதான் பெரிய தொழில் நிறுவனத் தலைவராக இருந்தாலும் ஏனோ பாவம் சஞ்சய் ராமசாமிக்கு ஒன்றுவிட்டு பெரியப்பா போல எளிதில் சில பல காரியங்களை மறந்து போய்விடுவார்.. 
அப்படித்தான் ஒருநாள் தான் தங்கியிருந்த விடுதியில் தனது துணிமணிகளை எல்லாம் வைத்துவிட்டு கைபேசி உடன் வாக்கிங் சென்றுவிட்டார். வாக்கிங் முடிந்து திரும்பும் போது வழியை மறந்துவிட்டார். வழியை மறந்த பதட்டத்தில் ஏனோ விடுதியின் பெயர், அறையின் எண்,  விடுதி தொலைபேசி எண் ஆகிய அனைத்தையும் மறந்து விட்டார். என்னடா இது நூதனமான வியாதியா இருக்கேன்னு பலர் நினைக்கலாம் என்ன செய்வது நண்பராகி விட்டாரே. சரி அதை விடுங்க. அனைத்தையும் மறந்து அவர் எங்கே அதை யாரிடமாவது சொன்னால் மானம் போய் விடுமோ என்று எண்ணி பயபுள்ள சொல்லாமலேயே வெகு நேரமாய் விடுதியை தேடி அலைந்தான். பின்னர் ஏதாவது ஒரு விடுதியில் இப்போதைக்கு தங்கி நாம் இருந்த விடுதியை கண்டுபிடிப்போம் என்று எண்ணி மீண்டும் ஒரு விடுதியில் சென்று அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினான். ஐந்து நாட்கள் அந்த அறையில் இருந்த படியே தான் முன்னர் தங்கியிருந்த விடுதியின் விலாசத்தை தேடிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சென்று போலீசிடம் சொல்லி விடுவோம் என்று எண்ணி போலீஸிடமும் சொன்னான்.. அவர்கள் விசாரணை நடத்திய பின் மீண்டும் எனது நண்பரிடம் வந்து நாங்கள் தேடி அலைந்த பிறகு முக்கியமான விடயத்தை கண்டுபிடித்துள்ளோம். ‘நீங்கள் ஐந்து நாட்களாக முன்னர் தங்கியிருந்த அதே விடுதியில் வேறு ஒரு அறையில் தங்கி கொண்டிருந்துதான் உடமைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று சொன்னார்களாம்‌. அவ்வளவுதாங்க என் நண்பருக்கு மீண்டும் பதட்டத்தில் வியர்த்துப் போய்விட்டது. 

ஐயோ கதை முடிஞ்சிருச்சு இப்போ கருத்து கண்ணாயிரமாயிடுவானே இவன் என்று உங்கள் மனம் பதைப்பது புரிகிறது. என்ன செய்வது?

சரி வாங்க நாம விடயத்துக்கு வருவோம். என் நண்பனைப் போல் தான் பலரும் தமது இயலாமையையும் நம்மிடம் இருக்கும் இல்லாமையும் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கு ஐயப்படுவது அது மட்டுமல்லாமல் அதை ஒரு கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறோம். சரி நமக்கு அடுத்திருப்பவரிடம் தான் சொல்ல யோசிக்கிறோம் என்றால் அதை நம்மை படைத்தவரிடமும் சொல்ல யோசிக்கிறோம். ‘அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே' என்ற எகத்தாள பேச்சுகளுக்கு மத்தியில் உயிருள்ள கடவுளின் வார்த்தை இதற்கு சிறந்த விளக்கம் அளிக்கிறது.. 
இயேசுவின் 40 நாள் பாலைவன அனுபவம் இன்று நமக்கு பாடமாக அமைகிறது. தன்னைத்தானே ஆராய்ந்து அறியவும் தனது பணியை பற்றிய புரிதலையும் இந்த பாலைவனத்தில் காய்ந்த நிலையில் அனுபவிக்கிறார் இயேசு. ஆனால், சாத்தான் வந்து சோதிக்கும் போது அதை அவர் தற்பெருமையாக எண்ணி மறைக்காமல் உண்மையை வெளிப்படுத்துகிறார். உண்மை நிலையை நன்கு உணர்ந்தவராய் மூன்று படிநிலைகளில் இருக்கும் இடையூறுகளை கடவுளின் வார்த்தை கொண்டு வென்றிருக்கிறார்.
  1. வயிற்றுப் பசி (Physical Evil)
  2. உயிர் பயம். (Psychological Evil)
  3. உலக இன்பம் (Social Evil)
இந்த மூன்றின் மீது இருந்த பயத்தை விலக்கி முழு மனித முதிர்ச்சி அடைந்து வருகிறார் ஏசுகிறிஸ்து. அதனால்தான் அவரால் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையின் உருவமாக வாழ முடிந்தது. பிறருக்கு அளிக்கப்படும் துன்பத்தில் பங்கேற்று அநீதிக்கு எதிராய் சாட்டை எடுக்க முடிந்தது. 
எனவே அன்பு சகோதர சகோதரிகளே இவ்வாறு நமது உண்மை நிலைகளை மறந்த நிலையில் இருக்கும் போதும் உண்மைகளை ஏற்க மறுக்கும் பொழுதும் இரண்டு நிகழ்வுகள் நம்மில் ஏற்படுகின்றன 
  1. நாம் எதையாவது தொலைத்து விடுகிறோம் 
  2. நாமே தொலைக்கப் பட்டவர்கள் ஆகிவிடுகிறோம். 

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை நமது மனங்களையும் நமது வாழ்வையும் பலவாறான சிக்கல்களிலும் சவால்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஈடுபடுத்தியிருப்பது கண்கூடாக தெரிகிறது. இந்த நிலையில் தெளிவு அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 
எனவேதான் இயேசுவின் பாலைவன அனுபவம் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியின் பகுதியாக ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அவளது காணிக்கையை செலுத்துகிறார். 
இந்த நிகழ்வு நமக்கு தெளிவு பெறக்கூடிய வாழ்வை அமைத்துக்கொள்ள முதற்படியாக அமைகிறது. அது என்னவென்றால் முதலில் இவ்வாறான குழப்பங்களுக்கு இடையே தெளிவை பெற நாம் நம்மை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்தல் வேண்டும். அவ்வாறான முழுமையான அர்ப்பணிப்பு நம்மை நமக்குள் இருக்கும் உண்மை தன்மையையும் வெளியில் இருக்கும் எதார்த்தத்தையும் உணர்ந்து சரியான புரிதலுக்கு இட்டுச்செல்லும். 
இன்றைக்கு இருக்கும் அரசின் செயல்பாடுகள் “இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக்கிட்டு இருக்கு” என்ற தைரியத்தில் செயல்பட வைக்கிறது. ஒருவேளை நம்மை வீட்டில் இருக்கும்படி செய்வதும் கூட அதன் உத்தியாக இருக்கலாம். இருப்பினும் வீட்டிலிருந்தபடியே நமது மனங்களில் புரட்சியை ஏற்படுத்துவோம். காய்ந்த நிலங்களுக்கு நம்மை கடவுளிடம் அர்ப்பணிப்பதன் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். கலங்கி கொண்டிருக்கும் நமது மன பாலைவனத்தில் கொஞ்சம் மழை பெய்தால் நல்லாதானே இருக்கும்.

1 comment:

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD