சனிக்கிழமை சங்கதி - 5

சனிக்கிழமை சங்கதி 5

நம்பிக்கை: விளைவுகளின் விவகாரம்


மெரா

---------------------------------------------------------------------

லாக் டவுன் இன்றைக்கு முடியுமோ? நாளைக்கு முடியுமோ? என்று விழிகளில் விளக்கெண்ணை ஊற்றி காத்துக்கொண்டிருக்கும் வெறுப்படைந்த மக்களுக்கு என் வணக்கங்கள். 

இன்றைக்கு சங்கதிக்கு போறதுக்கு முன்னாடி இந்த வாரத்தோடு சிறப்பு அம்சம் நம்மை இன்றைய தலைப்புக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகிறேன்.  புரியவில்லையா? 

சென்ற வாரத்தை ‘இழப்பு’ வாரம் என்று கூறி இருந்தேன். ஆனால் இந்த வாரம் ‘பிறப்பு’ வாரமாகவே இருக்கிறது. ஆமாங்க! கொரோனா தொற்றினால் 5% பேர் உலகளவில் உயிரிழக்க, 5% பேர் கொரோனா நமக்கும் வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் இந்த வார கணக்கெடுப்பின்படி 30% பெண்கள் கருத்தரிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 

அது ஒரு புறமிருக்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததால் பல மாணவர்களின் வாழ்க்கை மறுபிறப்பு அடைந்துள்ளது.

சரி வாங்க சங்கதியை கேட்கலாம்

ஒரு நாள் மாலை வேளையில் எனது மாலை ஜெபத்தை முடித்துவிட்டு வழக்கம் போல் புத்தகங்கள் படிக்க தொடங்கினேன். என் மனதிற்குள் வெகுநாட்களாக ஒரு கேள்வி, பயம், குழப்பம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது ஒரு விடயம். பல புத்தகங்களும் நபர்களும் பல வேளைகளில் எனது கேள்விகளுக்கு விடை தந்திருக்கிறார்கள். இன்னும் பல நபர்கள் நம்பிக்கைக்கு துரோகம் விளைவித்தவர்களும் உண்டு. அவர்களால் ஏற்பட்ட தீரா காயங்கள் மனதில் பள்ளத்தாக்குகளை ஏற்படுத்தினாலும் நாம் நம்பிக்கை கொண்டோரின் உந்துதல் பள்ளத்தாக்குகளையும் நிரப்பிவிடுகின்றன. இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் சிறுகதை ஒன்று கண்ணில் தென்பட்டது அதை ஆர்வமுடன் வாசிக்கலானேன். 

ஹட்ஸன் டெய்லர் என்ற புகழ்பெற்ற மதபோதகர் கேனிபல் தீவுகளுக்கு மாலுமிகளுடன் பாய்மரக் கப்பலில் பயணித்தார். அப்போது கரையை அடைய சில மணி நேரங்களே இருந்த நிலையில் திடீரென்று கடல் நிசப்தமானது. காற்று வீசுவது நின்று போக பாய்மரக்கப்பல் நகராமல் நின்றது. உடனே அந்த கப்பலின் கேப்டன் அங்கிருந்த ஹட்ஸனிடம் சென்று ‘காற்று வீசும் படி இறைவனிடம் வேண்டுங்கள்' என்று கேட்டார். உடனே அந்த ஹட்ஸனும் ‘நான் நிச்சயம் வேண்டுகிறேன் ஆனால் நீங்கள் முதலில் பாய்களை காற்றை பற்றும் படி நிறுத்தி வையுங்கள்' என்றார். ஆனால் கேப்டன் ‘அவ்வாறு செய்வதன் மூலம் பிற மாலுமிகள் முன் நமது மானம் கப்பலேறி விடுமோ?’ என்று பயந்து ‘அவ்வாறு செய்யமாட்டேன்' என்றார். அப்போது ஹட்ஸன் ‘நானும் இறைவனிடம் உதவி கேட்டு வேண்ட மாட்டேன்' என்று சொல்லிவிட்டார். சிறிது நேரம் கழித்து 'என்னடா இது நமக்கு வந்த சத்திய சோதனை' என்று எண்ணி கப்பலின் கேப்டன் ‘சரி நான் பாய்களை விரித்து தயார்நிலையில் வைக்கிறேன் நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள்' என்றார்.‌ ஹட்ஸன் கதவை தாளிட்டுக் கொண்டு செபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க செபத்திலிருந்து எழுந்து கதவை திறந்த போது கப்பலின் கேப்டன் ஹட்ஸனிடம் நீங்கள் ‘இன்னும் ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டார். உடனே அவரும் ‘ஆம்’ என்று பதிலளித்தார். உடனே கேப்டன் ஹட்ஸனிடம் ‘நீங்கள் ஜெபம் செய்தது போதும் என்று நினைக்கிறேன்' என்று கூற ‘ஏன்’ என்று அவர் கேட்க அதற்கு கேப்டன் இவ்வாறு கூறினார் ‘நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக காற்று வீசுகிறது எனவே காற்று வீசும் படி இறைவனிடம் வேண்டுடியது போதும்’ என்றார்.”


இப்பொழுது வாங்க சங்கதி என்னவென்று பார்ப்போம்.


இப்போது மேலே கூறப்பட்ட கதையில் மதபோதகர் மாலுமிகளின் கேப்டனிடம் தங்களால் முடிந்த காரியத்தை செய்யச் சொல்கிறார். அதன்பிறகு தான் இறைவனிடம் ஜெபிப்பதாகவும் கூறுகிறார். இதில் இரண்டு விடயங்கள் புலப்படுகிறது ஒன்று மத போதகரின் நம்பிக்கை மற்றொன்று கேப்டனின் நம்பிக்கையின்மை. ஆனால் உதவிகேட்டு வந்தவரோ கேப்டன் தான் மதபோதகர் அந்த உதவியை செய்து தருவதாக கூறுகிறார். இதில் கேப்டனிடம் தெளிவான நம்பிக்கையின்மையை நம்மால் காண முடிகிறது.  அதனால்தான் போதகர் முதலில் கேப்டனை அந்த பாய்மரக் கப்பலின் பாய்களை விரித்து தயார்நிலையில் வைக்கும்படி கூறினார். இதையேதான் புனித தொன் போஸ்கோ 'Do the best you can. God and Mary will do the rest.’ என்று கூறுவார். இறைவன் மீது ஹட்ஸன் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானதாக இருந்திருக்கிறதை நம்மால் உணர முடியும். 


எங்கேயோ படித்த ஞாபகம் “நம்பிக்கை என்பது காண முடியாத காரியங்களை காணும், வியக்கத்தக்கதை நம்பும், இறுதியில் இயலாத காரியங்களையும் பெற்றுக் கொள்ளும்.”


ஆம் உண்மையில் அதுதான் நம்பிக்கையின் சரியான வரையறையாகும். பல நேரங்களில் நாமும் பல காரியங்களை செய்கிறோம் ஆனால் எல்லா காரியங்களையும் நம்பிக்கையுடன் தான் செய்கிறோம். எவ்வாறெனில் ஏதோ ஒருவிதமான எதிர்நோக்கு நம்பிக்கை நம்மில் அந்த காரியத்தை செய்யத் தொடங்கும்போது பிறக்கிறது. அதனால்தான் போதகரும் கேப்டனை சென்று ‘முதலில் உன்னால் முடிந்த காரியத்தை செய் பிறகு அந்த ஜெபத்தின் வல்லமை அதில் புலப்படும்’ என்று கூறுகிறார். 


நம்பிக்கை இங்கு நால்வகை நிலைகளில் பரிணமிக்கிறது. 

  1. நடக்கின்ற நிகழ்வின்மீது நம்பிக்கை (Hope in the event – Phenomeno Centric Hope)
  2. செய்யப்படுகின்ற நபர்கள் மீது (Hope in Other – Altruistic Hope)
  3. செய்கிறவர் மீது (Hope in Oneself – Egocentric Hope)
  4. கடவுள் மீது (Hope in God – Theocentric Hope)

நாம் பல நேரங்களில் முதல் இரண்டு காரியங்களில் கருத்தாய் இருந்து தோற்கிறோம். அதனால் தான் நம்மீது நமக்கு சந்தேகம் ஏற்பட்டு நம்பிக்கை இழந்தோர் ஆகிறோம். கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருமே எந்த காரியங்களை செய்ய துணிந்த பின்பும் அதில் நம்பிக்கை இல்லாமல் செய்வதில்லை. நம்பிக்கை இல்லாமல் செய்யும் பொழுது அங்கு அந்தக் காரியங்கள் நடைபெறாமல் இருப்பதை பல நேரங்களில் நாம் கண்கூடாக பார்த்ததுண்டு. உதாரணமாக மத்தேயு 13: 58 ல் இயேசு அங்கிருந்த மக்களின் நம்பிக்கையின்மையால் வல்ல செயல்கள் பல அவரால் செய்ய முடியவில்லை என்று நாம் விவிலியத்தில் படித்திருக்கிறோம். 


“சிறிதளவு நம்பிக்கை நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லும் ஆனால் பெரிதளவு நம்பிக்கையோ விண்ணகத்தையே நம் ஆன்மாவிடம்” என்று ஒரு புகழ்பெற்ற சொல்லாடல் இருந்து வருகிறது.  

பல நேரங்களில் நாம் இழப்பினை சந்திக்கும் பொழுது, குறிப்பாக நம்மை சார்ந்த, நமக்கு மிகவும் நெருக்கமான சிலரை நாம் இழக்கும் தருவாயில் அவர் அருகே சென்று நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள் என்று சொல்லும்பொழுது மிகவும் அபத்தமாக தோன்றும். ஆம் அந்த நேரங்களில் நிச்சயமாக நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் நம்மை விட்டு பிரிந்து விடுவார் என்று நன்கு உணர்ந்த பொழுதும் நமக்கு சொல்லப்படும் அந்த வார்த்தைகள் உண்மையில் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தாது, அது வெறும் ஆறுதலாக வேண்டுமானால் அமையலாம். 

அதுமட்டுமன்றி பல நேரங்களில் வாழ்க்கையே வெறுத்துப் போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்  நம்மில் பலரிடத்திலும் நம்பிக்கை என்பது சிறிது குறைந்தே காணப்படும். ஏன் பல நேரங்களில் வாழ்க்கை வழுக்கி விழுந்தார் போல் தோன்றக்கூடும். பல இளைஞர்கள் இந்த நம்பிக்கை என்ற விடயத்தை தவறாக புரிந்து கொள்வதால் தான்தவறான பாதையில் தங்களது வாழ்வை செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய  கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். 


ஆனால் இன்று இறைவன் நம் அனைவருக்கும் ஒரு சிறிய இறைவார்த்தையினால் நம்பிக்கை என்கிற இறைப் பரிசை விளக்குகிறார். லூக்கா 17:6ல் கடுகளவு நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் மலையை பார்த்துப் பெயர்ந்து கடலில் ஊன்றி நில் என்று சொன்னால் அது உண்மையில் நடக்கும் என்று இயேசு கூறுகிறார். ஏனெனில் விவிலியம் கூறுகிறது. மாற்கு 10: 27 கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ஆகையால் நாம் கடவுள் மீது கொண்டுள்ள சிறிதளவு நம்பிக்கை இயலாத காரியங்கள் பலவற்றை செய்ய வல்லது. 


இதை இன்னும் ஆழமாக இன்னும் எதார்த்தமாக கூற வேண்டுமானால், குறிப்பாக கடவுளை நம்பாத அவர்களுக்கு இயேசுவின் இந்த செய்தி பொதுவான செய்தியாக அமையலாம். உலகில் உள்ள அனைவருக்கும், ஆத்திகர் நாத்திகர் என்று இல்லாமல் பொதுவான விடயத்தை இயேசு கூறுகிறார். உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.


இந்கு கூறப்படும் இந்த விடயம் அபத்தமாக இருப்பினும் குறிப்பாக பலர் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் நம்மை பயன்படுத்தி அல்லது நம்மை உதாசீனப்படுத்தி, அந்த நம்பிக்கையை குலைத்து நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிற நேரத்தில் அதை முழுவதுமாக உடைத்த நேரங்களை நாம் எண்ணிப் பார்க்கையில் பிறர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற எண்ணமே நமக்கு அமானுஷ்ய கனவாக அமைந்து விடுகிறது. 

இருப்பினும் உண்மையாக மன அமைதி பெற வேண்டுமென்றால் நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாத தன்மை நமது வாழ்க்கையை இருளில் ஆழ்த்திவிடும். அதற்கு விவிலியமே சான்று இயேசு மக்களின் நம்பிக்கையின்மையை கண்டு அவரால் அற்புதங்கள் எதுவும் செய்ய முடியவில்லை (மத்தேயு 13 58) என்று நாம் வாசிக்கிறோம். கடவுளை இயக்கும் சக்தியாக இந்த நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் நம்பிக்கை என்ற விடயத்தை நாம் சௌகரியமான சூழ்நிலையில் பயில முடியாது. உண்மையான மனிதனின் நம்பிக்கை ஒரு விடயத்தை இழப்பதன் மூலமும் அதை அவனிடமிருந்து படிப்பதன் மூலமும் அதிகரிக்கும். 


“இழப்பே நம்பிக்கையின் பிறப்பிடம்” 


எனவே நம்பிக்கையை இழந்து விடாமல் வருகின்ற நாட்களிலும் நமது வாழ்வை வளமாக்க நம்பிக்கையை கையில் எடுப்போம்.


நம்பிக்கை: நம் வாழ்க்கையின் விளைவுகளுக்கான விவகாரம்.

கடவுள்


கடவுள்

ஜோசப் அமல்ராஜ் - சென்னை
---------------

ஆம்
எங்கும் வியாபித்திருப்பவன்தான் விண்ணவன்!
எங்கும் கடந்து கிடப்பவன்தான் கடவுளவன்!
அனைத்தையும் ஆண்டு நடத்துபவன்தான் ஆண்டவன்!


மனிதன் இருக்குமிடமெல்லாம்
கடவுளும் இருக்கிறார்!
படைப்பு இருக்குமிடமெல்லாம்
படைத்தவனும் இருக்கிறான்!


அனைத்தையும் கடந்தவனல்ல கடவுள்!
எனெனில்...
அனைத்துமே கடவுள்!

காரணங்களைக் கடந்தவனல்ல கடவுள்!
ஏனெனில்...
காரணங்களே கடவுள்!


அடுத்தவர் விருப்பப்படிதான்
வாழ வேண்டுமென்றால்...
வீழ்ந்து விடு!
ஆண்டவன் விருப்பப்படி தான்
வாழ வேண்டுமென்றால்....
அடங்கி விடு!

          எங்குமிருக்கும் ஆண்டவன்...
அங்கிருக்கிறானோ இங்கிருக்கிறானோ இல்லையோ,
உன் அகத்திலிருக்கிறானா இல்லையா
என்பதுவே பிரச்சனை!

ஆண்டவன்
ஆலயங்களில் இருக்கிறாரோ இல்லையோ
அவலத்திலிருக்கும்
அனைவரிடத்திலும் இருக்கிறான்!

நினைவுக்கு வருகிறதா
அன்னை மரியாவின் புகழ்ப்பாடல்
எனது ஆண்டவர்....
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று
தூக்கி எறிந்துள்ளார்.
தாழ்நிலையில் இருப்போரை
உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்.
செல்வரை வெறுங்கையராய்
அனுப்பிவிடுகிறார்!

பகட்டானவன் கைகளுக்கு
கடவுள் எட்ட மாட்டார்!

கடவுளின் திட்டத்தில்
ஆக்கம் என்பது அழிவே!
அழிவு என்பதும் ஆக்கமே!

கடவுளின்
அன்றைய தலைகீழ்ப் புரட்டிப் போடலே
மக்களின்
இன்றைய புதை படிம எரி பொருட்கள்!

பால்கனியில் நிக்க முடியலேயின்னு
பதட்டப்படாதே!
தெருவுல நிக்க வைக்கலியேன்னு 
பதப்படு!

கடவுளை
'அப்பா....தந்தாய்! என்றழைப்பதே
அபாரமான கொடைதான்!

நீ கடவுளிடம் 
உனக்கு வேண்டியதையெல்லாம் வேண்டினாலும்,
அவர் உனக்கு...
வேண்டியதை மட்டுமே தருவார்!

கடவுளைத் தேடி அலைவோர்க்கு
கடமையைச் செய்பவர்களெல்லாம் கடவுளே!

கடவுளைக் காண்பதும்
கடவுள் தன்மையைக் காண்பதும் வெவ்வேறல்ல!

கடமையைச் செய்தால் கடவுளாகலாம்;
கடமைக்கு செய்தால்..?
கடமையைக் கச்சிதமாய் செய்து விடு!
மீதியைக் கடவுளிடம் விட்டுவிடு!

தரணியெங்கும் தாயைக் காண்பவன்...
தடுமாறி நிற்க மாட்டான்!

அகிலமெங்கும் அம்மாவைக் காண்பவன்...
ஆன்மீகத்தில் அலறி நிற்க மாட்டான்.

இயற்கை இன்னொரு தெய்வமாய் - விக்டர் லாரன்ஸ்

இயற்கை இன்னொரு தெய்வமாய்

விக்டர் லாரன்ஸ் 


---------------------------------------------------

கானல் நீரை
கட்டியணைக்க
கர்வத்தோடு 
களமிறங்கும்
கை சூப்பும் 
குழந்தை போல
கொரோனாவின் 
குடும்பத்தை
குறி சொல்லி
கதை முடிக்க

அறிவும் மருந்தும்
அன்றாடம் 
உழைத்தும்
அழிக்க முடியாத 
அவல நிலையில்

இனியாவது 
இயற்கையை
இன்னொரு 
தெய்வமாய்
இகத்தில் 
போற்றி
வாழ்வோம் 
நாமும்
வருத்தமில்லா
வாழ்வை

-
லாரன்ஸ் 

சனிக்கிழமை சங்கதி 4

சனிக்கிழமை சங்கதி 4

சகோ. மெரா 

----------------------------

வணக்கம் அன்பு வாசகர்களே!  இன்று சனிக்கிழமை வந்தாச்சு... அதுக்குள்ள சனிக்கிழமை வந்தாச்சா? என்று அதிர்ந்து போபவர்களும் உண்டு! 
அதேநேரத்தில் சண்டே ஆவது மண்டே ஆவது All day Jolly day என்று வாழ்க்கையில் வழுக்கையே விழுந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாதவர்களும் உண்டு. 
இன்றைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களும் சவால்களும் நமது வாழ்வை ஏறி! ஏறி! சறுக்கி! சறுக்கி! விளையாடும் சறுக்கு மரமாக மாற்றி இருக்கிறது. அதிலும் இந்த வாரம் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வாரமாகவும் இருக்கிறது. 
என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதுதாங்க அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கொலை சம்பவம், கேரளத்து யானையின் இறப்பு, கொரோனாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இந்த வாரம் முழுவதுமே இறப்பு வாரமாகவே இருக்கிறது. பலருக்கு இந்நிகழ்வுகள் பழகிப்போன ஒன்றாக இருக்கலாம், பலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி அடுத்து நாம் தானோ? என்ற பயமும் ஏற்படலாம். 
மனிதம் எங்கே செல்கிறது என்று பலரும் புயல் காற்றில் ஊதும் புல்லாங்குழல் இசை போல இருப்பது இன்றியமையாதது. இதன் நடுவில் நாம என்ன சங்கதி பேச போறோம் என்று பலர் என்ன கூடும். காஞ்சி போய் கழட்டி மாட்டி விட்டு கொண்டிருக்கும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வரண்ட மனங்களில் கொஞ்சம் மழை பெய்தால் நல்லாதான் இருக்கும்.
சரி வாங்க சங்கதிக்குள் போகலாம்
கொஞ்ச வருடத்துக்கு முன்னாடி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் வெளியூருக்கு வேலை விடயமாக சென்றிருந்தார். சென்ற ஊரில் யாரையும் தெரியாத காரணத்தால் அங்கு இருந்த விடுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்தார். என்னதான் பெரிய தொழில் நிறுவனத் தலைவராக இருந்தாலும் ஏனோ பாவம் சஞ்சய் ராமசாமிக்கு ஒன்றுவிட்டு பெரியப்பா போல எளிதில் சில பல காரியங்களை மறந்து போய்விடுவார்.. 
அப்படித்தான் ஒருநாள் தான் தங்கியிருந்த விடுதியில் தனது துணிமணிகளை எல்லாம் வைத்துவிட்டு கைபேசி உடன் வாக்கிங் சென்றுவிட்டார். வாக்கிங் முடிந்து திரும்பும் போது வழியை மறந்துவிட்டார். வழியை மறந்த பதட்டத்தில் ஏனோ விடுதியின் பெயர், அறையின் எண்,  விடுதி தொலைபேசி எண் ஆகிய அனைத்தையும் மறந்து விட்டார். என்னடா இது நூதனமான வியாதியா இருக்கேன்னு பலர் நினைக்கலாம் என்ன செய்வது நண்பராகி விட்டாரே. சரி அதை விடுங்க. அனைத்தையும் மறந்து அவர் எங்கே அதை யாரிடமாவது சொன்னால் மானம் போய் விடுமோ என்று எண்ணி பயபுள்ள சொல்லாமலேயே வெகு நேரமாய் விடுதியை தேடி அலைந்தான். பின்னர் ஏதாவது ஒரு விடுதியில் இப்போதைக்கு தங்கி நாம் இருந்த விடுதியை கண்டுபிடிப்போம் என்று எண்ணி மீண்டும் ஒரு விடுதியில் சென்று அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினான். ஐந்து நாட்கள் அந்த அறையில் இருந்த படியே தான் முன்னர் தங்கியிருந்த விடுதியின் விலாசத்தை தேடிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சென்று போலீசிடம் சொல்லி விடுவோம் என்று எண்ணி போலீஸிடமும் சொன்னான்.. அவர்கள் விசாரணை நடத்திய பின் மீண்டும் எனது நண்பரிடம் வந்து நாங்கள் தேடி அலைந்த பிறகு முக்கியமான விடயத்தை கண்டுபிடித்துள்ளோம். ‘நீங்கள் ஐந்து நாட்களாக முன்னர் தங்கியிருந்த அதே விடுதியில் வேறு ஒரு அறையில் தங்கி கொண்டிருந்துதான் உடமைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று சொன்னார்களாம்‌. அவ்வளவுதாங்க என் நண்பருக்கு மீண்டும் பதட்டத்தில் வியர்த்துப் போய்விட்டது. 

ஐயோ கதை முடிஞ்சிருச்சு இப்போ கருத்து கண்ணாயிரமாயிடுவானே இவன் என்று உங்கள் மனம் பதைப்பது புரிகிறது. என்ன செய்வது?

சரி வாங்க நாம விடயத்துக்கு வருவோம். என் நண்பனைப் போல் தான் பலரும் தமது இயலாமையையும் நம்மிடம் இருக்கும் இல்லாமையும் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கு ஐயப்படுவது அது மட்டுமல்லாமல் அதை ஒரு கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறோம். சரி நமக்கு அடுத்திருப்பவரிடம் தான் சொல்ல யோசிக்கிறோம் என்றால் அதை நம்மை படைத்தவரிடமும் சொல்ல யோசிக்கிறோம். ‘அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே' என்ற எகத்தாள பேச்சுகளுக்கு மத்தியில் உயிருள்ள கடவுளின் வார்த்தை இதற்கு சிறந்த விளக்கம் அளிக்கிறது.. 
இயேசுவின் 40 நாள் பாலைவன அனுபவம் இன்று நமக்கு பாடமாக அமைகிறது. தன்னைத்தானே ஆராய்ந்து அறியவும் தனது பணியை பற்றிய புரிதலையும் இந்த பாலைவனத்தில் காய்ந்த நிலையில் அனுபவிக்கிறார் இயேசு. ஆனால், சாத்தான் வந்து சோதிக்கும் போது அதை அவர் தற்பெருமையாக எண்ணி மறைக்காமல் உண்மையை வெளிப்படுத்துகிறார். உண்மை நிலையை நன்கு உணர்ந்தவராய் மூன்று படிநிலைகளில் இருக்கும் இடையூறுகளை கடவுளின் வார்த்தை கொண்டு வென்றிருக்கிறார்.
  1. வயிற்றுப் பசி (Physical Evil)
  2. உயிர் பயம். (Psychological Evil)
  3. உலக இன்பம் (Social Evil)
இந்த மூன்றின் மீது இருந்த பயத்தை விலக்கி முழு மனித முதிர்ச்சி அடைந்து வருகிறார் ஏசுகிறிஸ்து. அதனால்தான் அவரால் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையின் உருவமாக வாழ முடிந்தது. பிறருக்கு அளிக்கப்படும் துன்பத்தில் பங்கேற்று அநீதிக்கு எதிராய் சாட்டை எடுக்க முடிந்தது. 
எனவே அன்பு சகோதர சகோதரிகளே இவ்வாறு நமது உண்மை நிலைகளை மறந்த நிலையில் இருக்கும் போதும் உண்மைகளை ஏற்க மறுக்கும் பொழுதும் இரண்டு நிகழ்வுகள் நம்மில் ஏற்படுகின்றன 
  1. நாம் எதையாவது தொலைத்து விடுகிறோம் 
  2. நாமே தொலைக்கப் பட்டவர்கள் ஆகிவிடுகிறோம். 

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை நமது மனங்களையும் நமது வாழ்வையும் பலவாறான சிக்கல்களிலும் சவால்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஈடுபடுத்தியிருப்பது கண்கூடாக தெரிகிறது. இந்த நிலையில் தெளிவு அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 
எனவேதான் இயேசுவின் பாலைவன அனுபவம் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியின் பகுதியாக ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அவளது காணிக்கையை செலுத்துகிறார். 
இந்த நிகழ்வு நமக்கு தெளிவு பெறக்கூடிய வாழ்வை அமைத்துக்கொள்ள முதற்படியாக அமைகிறது. அது என்னவென்றால் முதலில் இவ்வாறான குழப்பங்களுக்கு இடையே தெளிவை பெற நாம் நம்மை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்தல் வேண்டும். அவ்வாறான முழுமையான அர்ப்பணிப்பு நம்மை நமக்குள் இருக்கும் உண்மை தன்மையையும் வெளியில் இருக்கும் எதார்த்தத்தையும் உணர்ந்து சரியான புரிதலுக்கு இட்டுச்செல்லும். 
இன்றைக்கு இருக்கும் அரசின் செயல்பாடுகள் “இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக்கிட்டு இருக்கு” என்ற தைரியத்தில் செயல்பட வைக்கிறது. ஒருவேளை நம்மை வீட்டில் இருக்கும்படி செய்வதும் கூட அதன் உத்தியாக இருக்கலாம். இருப்பினும் வீட்டிலிருந்தபடியே நமது மனங்களில் புரட்சியை ஏற்படுத்துவோம். காய்ந்த நிலங்களுக்கு நம்மை கடவுளிடம் அர்ப்பணிப்பதன் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். கலங்கி கொண்டிருக்கும் நமது மன பாலைவனத்தில் கொஞ்சம் மழை பெய்தால் நல்லாதானே இருக்கும்.

இறையன்பு - சகோ. அமர்

இறையன்பு 

சகோ. அமர்

------------------------------------------------------- 




மண்ணில் மலர்ந்து 
மலரோடு மணந்து  

சுவையில் கலந்து 
உறவில் இணைந்து  

காற்றைக் கடிந்து 
கடல் மீது நடந்து 

பாவத்தைச் சுமந்து 
சிலுவையில் இறந்து 

உயிரோடு எழுந்து 
தூய ஆவியைப் பொழிந்து 

துணையாய் இருந்து 
துன்பத்தில் விரைந்து 

உதவி புரிந்து 
உலகைக் கவர்ந்து 

உன்னில் 
எண்ணில் 
உறைந்து 

இயற்கையில் பரந்து 
இருப்பது இறையன்பு 


விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD