சனிக்கிழமை சங்கதி - 3

சனிக்கிழமை சங்கதி - 3

கடவுள் என்ன செய்கிறார்? இருக்கிறாரா?

சகோ. மெரா 
----------------------------------------------------------------


உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது
என்ன… என்ன… ஃபீலிங்குன்னு மனதில் ஓடும் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டு… இருக்கட்டும்... இருக்கட்டும்… மே மாத வெயில், கொரோனா பீதி, இதில்  திடீர்னு கிளம்பிய வெட்டுக்கிளி கூட்டம் போதாக்குறைக்கு ஆம்பன் புயல் என நமது மனங்களில் மண்ணை வாரி இறைக்கும் இந்த வருடம் ஏன் பிறந்தது என்று கவலைப் படுபவர்களுக்கு சொல்லுகிறேன் “உங்கள் பீலிங்ஸ் எனக்குப் புரியுது.” 

இதன் மத்தியில் ‘யார் எக்கேடு கெட்டு போனால் என்ன! எந்த சூழ்நிலை ஆனால் என்ன? எனது கஜானா நிரம்பினால் போதும்’ என்று இருக்கிற பல பேதமை மேதாவிகள் நமது வாழ்க்கையில் இன்றும் குட்டிகரணம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் நடுவில் பல நபர்களுக்கு ‘என்னய்யா இந்த கடவுள் இவ்வளவு சோதிக்கிறார். உண்மையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற பல கேள்விகளுக்கு தங்கள் மனதை உட்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். இப்போ அந்த மாதிரியான நபர்களுக்கு தான் நான் சொல்லப்போற சங்கதியே கிடக்கு.

சரி சங்கதி பேசலாம் வாங்க
“ஒரு தூரதேசத்தில் அந்த நாட்டின் முதல் குடிமகனிடம் வேலை செய்துவந்த ஒரு அலுவலக உதவியாளரின் மகன் திடீரென்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது சிறிய விபத்தினால் அவனது கையில் அடிபட்டு இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. உடனே அடித்து பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து ஒரு பெரிய கூச்சலிட்டான். உடனே அவன் தந்தை மாலை வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்ததும் அவனை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவன் சமாதானம் ஆவது போல் தெரியவில்லை. உடனே அவன் தந்தை தன் மகனிடம் “Don’t worry my dear I understand your feelings!” என்று சொன்னார். 
உடனே அந்த மகன் என் உணர்வுகள் உங்களுக்கு எப்படி புரியும் என்று வினவினான்; உடனே அந்த தந்தையை பார்க்க வந்த ஜனாதிபதி, பிள்ளையின் அழுகுரலைக் கேட்டு அந்த பணியாளரின் வீட்டிற்குள் நுழைந்தார். பிள்ளையிடம் அவர் தந்தை கூறியது போன்று இவரும் கூறினார். மீண்டும் அந்தப் பிள்ளை ‘உங்கள் யாருக்கும் என் உணர்வுகள் புரியாது’ என வீல் என்று கத்திக்கொண்டு அலறினான். உடனே ஜனாதிபதி அவனருகில் அமர்ந்து ‘என் இரு கைகளையும் பற்றி பிடி’ என்றார். அந்த மகன் அவரது வலக்கையை பிடித்துவிட்டு இடது கையைத் தேடலானான். ஏனென்றால் ஜனாதிபதிக்கு இடது கை கிடையாது தனது வாழ்வில் நடந்த ஒரு பேராபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டார். ‘அன்று என் தந்தை என்னை காப்பாற்றவில்லை என்றால் நான் எனது வாழ்வையே இழந்திருப்பேன். இப்பொழுது சொல் உன் உணர்வுகள் எங்களுக்கு புரியாதா?’ என்று அப்பிள்ளையை பார்த்து கேட்டார்.”

ஆம் இதுதான் சங்கதி. பல நேரங்களில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நமது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் அவ்வாறு நமது எண்ணங்களை மாற்றி அமைக்கின்றது. இதற்கு விடைகாண நமது ஜனாதிபதியின் இடதுகையை தேடவேண்டும். என்னடா இவன் இல்லாத கையை தேடு என்கிறானே! ஒருவேளை கிறுக்க இருப்பானோ? என்றுகூட எண்ணலாம். பரவாயில்லை… அவ்வாறு சொல்பவர்களின் எண்ணங்கள் இன்னும் அந்த சிறு பிள்ளையின் எண்ணங்களாகவே இருக்கிறது. என்னடா இந்த கடவுள் இவ்வளவு சோதிக்கிறார்… அந்த கடவுளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று கேட்பவர்கள் தயவுசெய்து இந்த சங்கதியை நன்றாக கேளுங்கள்.

விரைந்து சென்று கண்ணாடியை பாருங்கள் உங்களுடைய அழகு முகம் தெரியும். அதே நேரத்தில் ஆழ்மனதின் காயங்களும் தெரியும். இப்பொழுது கண்ணாடியில் இருப்பவர் நீங்கள் அல்ல. உங்கள் பிரச்சினைகளை தாங்கி நிற்கின்ற கடவுள். அப்பொழுது நான் தான் கடவுளா? அல்லது நீதான் கடவுளா? என்று தேவதூஷணம் செய்கிற ஆளாக என்னை பார்ப்பவர்களும் இருக்கலாம். நான் கூற வரும் கருத்து அது இல்லை. உங்களைப் பற்றி, நீங்களாகவே இருந்து, உங்கள் பிரச்சினைகளை அறியக்கூடிய கடவுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அதனால் தான் அக்காலத்தில் கொடிய மரணமாகிய சிலுவை மரணத்தை ஏற்று முழு மனிதராக மறித்து நம் உணர்வுகளோடு கலந்து வாழ்கிறார். நம் இயேசு கிறிஸ்து. 

இந்த செயல்களின் மூலமாக நாம் அனைவரும் கடவுளை அறிய முற்படுகிறோம் அல்லது அவரது ஞானத்தை அறிய முற்படுகிறோம். அவ்வாறு அறிந்து புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருப்பவர் கடவுளாகவே இருக்க முடியாதே? எனினும் இயேசு அந்த இரு பரிணாமங்களுக்கு பொதுவான இறைமனித உறவை நிறுவுகிறார். 

ஏதோ ஒரு கிறுக்கன் ஒரு சுவற்றில் இவ்வாறு எழுதி இருந்தானாம் 

“கடவுள் இறந்துவிட்டார்” - நீட்சே 

உடனே வேறு ஒருவன் அதற்கு கீழாக இவ்வாறு எழுதியிருந்தான் 

“நீட்சே  இறந்துவிட்டான்” - கடவுள்

மறை உண்மைகள் இல்லாத மதம் கடவுள் இல்லாத மதம் என்பர் அறிஞர் பெருமக்கள். அதுபோல கடவுள் நாம் வேண்டும் நேரத்தில் செயல்பட வில்லை என்பதற்காக அவர் செயல்படவே இல்லை என்று கூறுவது அபத்தமானது. இந்த நேரத்திலும் கூட ‘உன் கடவுள் பெரியதா என் கடவுள் பெரியதா’ என்று போட்டி போட்டுக் கொண்டு கடவுளை வியாபார பொருளாக மாற்ற பல மூடர்களும் கூட சமுதாயத்தில் சுருக்குப் பையில் போட்டுக் கொண்டு அலைகிறார்கள் சிலர். இவர்களைப் போன்றோருக்கு கடவுளும் காட்சிப் பொருளே. உண்மையான ஆன்மீகத்தை கொண்ட எவரேனும் கடவுளிடம் கொண்டுள்ள அன்பை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். இதைத்தான் அன்று இயேசு கிறிஸ்து "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து," என்று மத்தேயு 22:37-ல் கூறுகிறார். அதற்கு இணையாக "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்று இன்னொரு கட்டளையையும் கொடுக்கிறார். 

work from Home என்று பலர் இன்று வீடுகளை கார்ப்பரேட் கம்பெனிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இவ்வாறான ஒரு சந்தேகம் ஏற்படுவதில் அவ்வளவு பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருப்பினும் ஒரு மனிதன் தனது பணி வாழ்வையும் தன்னுடைய ஆன்மீக வாழ்வையும் ஒரு நேர்கோட்டில் அமைத்துக்கொள்ள முடியுமா? என்கிற ஒரு தேர்வாக கூட இந்த ஊரடங்கு நமக்கு பயன்படலாம்.

தீமைகளை அனுமதிப்பவர் கடவுளா? மனிதர் படும் துயரத்தில் மகிழ்பவர் கடவுளா? என்ற பல கேள்விகளை சில சங்கிகள் கேட்டாலும், தீமைகளுக்கு காரணம் யார்? என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். கடவுள் மனிதருக்கு சுதந்திரம் அளித்துள்ளார். அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, இயற்கையை நமது சிந்தனைக்கு இசைவுறச் செய்வது கடவுளின் செயலாக இருக்க முடியாது. எனவே மனிதர் சுயநல பயன்பாட்டிற்காக விதைத்த விதை இன்று மரமாக வளரும் போது அதைக் கண்டு மனிதர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தானே வேண்டும். அதை விட்டு விட்டு நாம் பெற்ற பிள்ளையை கொல்ல முயல்வதா? அது ஆபத்து என்று தெரியும் போது கடவுளை நினைத்துக் கொள்வது மட்டும் சரியா? 

எனவே எனது அருமை தோழர்களே கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பது இப்போதைக்கான கேள்வி அல்ல. இந்த ஊரடங்கு நேரத்தில் நம்மை காட்டிலும் உயர்ந்த, அதிகார அடக்குமுறைகளை, நம் கண்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் பயன்படுகிறார் என்று நினைத்துக்கொண்டு சரியாக நமது சுதந்திரத்தை வருகின்ற நாட்களில் பயன்படுத்துவோம். பொறுப்பற்று திரியும் அசட்டு வீரர்களுக்கு இந்த ஊரடங்கு சிறிதளவாவது பொறுப்பினை கற்றுக் கொடுக்கட்டும்.

நீ வேண்டிய நேரத்தில் கடவுள் வரவில்லை அல்லது தேவையானதை செய்யவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்ற அர்த்தமில்லை. உனது உணர்வுகளை புரிந்து கொண்டவர் உன் கடவுள் எனவே வெட்டிப் பேச்சு பேசுவதை நிறுத்திவிட்டு வாழ்க்கைக்கு உகந்த நல்ல விஷயங்களை செய்ய முற்படுவோம். ஏழைகளை பாருங்கள் ஆதரவற்றோர் பாருங்கள் அவர்களில் நீங்கள் என்னை காண்கிறீர்கள் என்று மத்தேயு எழுதிய நற்செய்தி 25ஆவது அதிகாரத்தில் இயேசு அழகாக வெளிப்படுத்துகிறார். பல இடங்களில் உங்களை தேற்றுகிறார். எனவே மண்டைக்குள் இருக்கும் மண்ணாங்கட்டியை உடைத்தெறிந்து நல்ல நிலத்தில் நல்ல விதைகளை விதைப்போம். இன்று உங்கள் இறைவன் உங்களிடம் கூறும் ஒரே வார்த்தை “உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது.”

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD