சனிக்கிழமை சங்கதி - 1 செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்

சனிக்கிழமை சங்கதி - 1  

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்

சகோ. மெரா 

இந்த இனிமையான சனிக்கிழமையிலே ஊரடங்கால் ஓஞ்சு போயிருக்கும் உங்களிடம் சின்ன சங்கதி பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. சனிக்கிழமை வந்தாலே பலருக்கு, அதுவும் கொரோனாவால் கோமாளிகளாக மாற்றப்பட்டு முடங்கிப் போயிருக்கும் பலருக்கு, எந்த சேனலில் எந்தப் படம் போடுவார்கள்? எவ்வாறு இன்றைய பொழுதை செலவழிக்கலாம்? என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறமிருக்க... அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்யலாம் என்று வயிறு காய்ந்து வறுமைக்கு வாசக்கால் வைத்து வாழ்வோர் இன்னொரு புறமிருக்க இவர்கள் இருவரையும் பயன்படுத்தி மேல் மாடியில் வசிப்போர்கள் மேளதாளத்தோடு சுரண்டிக்கொண்டிருக்க, கோயில்களும் கோயம்பேடு மார்கெட்டும் கஜானாவை காலியாக்கிய நிலையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இதோ சொல்றேன் சங்கதி

இன்றைக்கான சனிக்கிழமை சங்கதியில் பக்கத்து ஊர் பெரியவர் துடுப்பு படகு ஓட்டி பயணிகளை இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஏற்றிச் செல்கிறார். அது துடுப்புப் படகு என்பதால் இருபக்கமும் துடுப்பு போட வேண்டும். அந்தப் பெரிய மனிதர் வைத்திருந்த ஒரு துடுப்பில் "நம்பிக்கை" என்றும் மற்றொரு துடுப்பில் "நற்செயல்" என்றும் எழுதியிருந்தார். அப் படகில் ஏறிய ஒரு சிறு வண்டு பெரியவரை பார்த்து "எதற்காக அவ்வாறு எழுதி உள்ளீர்?" என்று கேட்டானாம். உடனே பெரியவர் "அதற்கு அர்த்தம் என்ன என்று செயலில் காட்டுகிறேன் அப்போது புரிந்து கொள்வாய்" என்று கூறி ஒரு துடிப்பை மட்டும் கடலில் பயன்படுத்தி படகை ஓட்டினார். உடனே படகு ஒரு பக்கமாக சுழல ஆரம்பித்தது. அமர்ந்திருந்த சிறுவனுக்கு அடிவயிறு ஆட்டங்கண்டது. அதேபோல அடுத்த துடிப்பையும் தனித்து போட்டாராம். இப்போது படகு எதிர்திசையில் சுழலத் தொடங்கியது. பயத்தில்  கண் பிதுங்கிய சிறுவன் "போதும் தாத்தா என்னை கொல்லப் பார்க்கிறீரே!" என்று அச்சத்தில் அரண்டு போனான். அப்போது பெரியவர் இரு துடுப்பையும் பயன்படுத்த படகு முன்னேறியது. ஆட்டங்கண்ட சிறுவன் அமைதி அடைந்தான். அப்போது அந்தப் பெரியவர் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதுதாங்க சங்கதியே
கடவுளை காணாமலே விசுவாசிக்கிற மக்களே ! நல்லா கேளுங்க! இந்தக் கொரோனா  தொற்று பீதியை கிளப்பிவிட்டிருக்கும் இத்தருணத்தில் பெரியவர் படகின் துடுப்பு இன்று நம் வாழ்விற்கும் ஒரு துப்பு கொடுக்கிறது. கோயிலுக்கு போய் திருப்பலி காண முடியாத நிலையில் இன்று ஒவ்வொருவர் வீட்டுத் தொலைக்காட்சியும் திருப்பலி மேடையாகிப் போயிருக்கிறது. இதன் மத்தியில் விசுவாசம் மேலோங்கி இருக்கிறதா? தளர்ந்து போய் இருக்கிறதா? என்றால் அதில் மெத்தனப் போக்கே கணிசமாக வளர்ந்திருக்கிறது. அன்றைக்கு இயேசு தான் செய்த அரும் அடையாளங்கள் வழியாக நம்பிக்கையையும் நற்செயலையும் பிணைத்து பாடமாக தந்துள்ளார். இந்த செயல் வடிவ விசுவாசம் மூன்று நிலைகளில் விளங்குகிறது.
  1. அன்று இரத்தப் போக்குடைய பெண்ணின் நோயை குணப்படுத்தியதும் (மத் 9:22 | மாற் 5:34), கானானியப் பெண்ணின் பேய் பிடித்த மகளை அவரின் ஆழ்ந்த விசுவாசத்தைக் கண்டு நலம் ஆக்கியதும் (மத் 15:28) நலமாக்கும் நம்பிக்கையை விளக்குகிறது
  1. இரண்டாவதாக மகதலா மரியாவுக்கும் (லூக் 8), தன் கால்களை கண்ணீரால் கழுவிய பெண்ணுக்கும் (லூக் 7:50), நன்றி சொல்ல திரும்பிவந்த தொழுநோய் நீங்க பெற்றவருக்கும் (லூக் 17:19) இயேசு கிறிஸ்து விடுதலை அளிக்கும் விசுவாசத்தை விளக்கியிருக்கிறார்.
  1. மூன்றாவதாக ஆழ்ந்த விசுவாசம் ஒரு வாழும் நற்செய்தியாளர் ஆக மாற்றுகிறது என்பதை பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறும் நிகழ்விலும் (மாற் 10:52), பெத்சதா குளத்தருகே 38 ஆண்டுகளா ய் உடல் நலமாக இருந்தவரை நலமாக நிகழ்விலும் (யோவா 5:1-15) அனைத்து திருத்தூதரின் அழைத்தலிலும் நற்செய்திப் பணியின் நம்பிக்கை என்ற கருத்தையும் இயேசுவை புலப்படுத்துகிறார்.
அன்னை மரியாளின் வாழ்க்கையிலும் இந்த மூன்று நம்பிக்கையின் செயல்பாடுகள் புலப்படுவது கண்கூடு. மரியன்னையின் வணக்க மாதத்தோடு பாஸ்கா காலத்தின் நான்கு ஐந்து வாரங்களில் ஆன்மிகப் பயணம் செய்து கொண்டிருக்கும் நமக்கு, அதுவும் கொரோனா தொற்றோடு ஊரடங்கு விதிகளின் காரணத்தினால் உள்ளடங்கில் வாழும் நமக்கு இன்று கூறப்படும் செய்தி நற்செயல் இல்லாத நம்பிக்கை நட்ட சவத்திற்கு நடுகல் நாட்டியது போன்றதாகும். 
சரிங்க அப்போது விசுவாசம் இல்லாமல் நற்செயல் செய்பவர்களை என்னவென்று சொல்வீர்கள் என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்கும் சங்கிகளும் புரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு செய்பவர்களும் தன்னை மீறிய சக்தி உண்டு என்ற நம்பிக்கை இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய இயலாது. அதுவே ஆன்மீகமாக மாறுகிறது . "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை" (மாற் 11:22) என்று இயேசு விவிலியத்தில் கூறுவதை கண்கூடாக பார்க்கிறோம்

இவ்வளவுதாங்க சங்கதி! இந்த கொரோனா ஊரடங்கு விதிகளுக்கு மத்தியிலும் நம்மால் இயன்ற அளவுக்கு வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்தும் உணவில்லாமல் தவிப்போருக்கு உணவு கொடுத்தும் செத்த உணர்வுகளுக்கு உயிர் ஊட்டுவோம். நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கை அதானே எல்லாம். நம்முடைய நம்பிக்கையை உரமாக்குவோம் நற்செயல்களை மரமாக்குவோம். செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்... 

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD